மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது ‘அர்னாப்’ என்ற புயலாக தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையத்தின் எச்சரிக்கைப்படி, அக்.28 காலை பாபட்லா–விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து ஆந்திரக் கடலோர பகுதிகளுக்கும், ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

புயல் நெருங்குவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வீட்டிலேயே இருந்து தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அவசர தேவைக்கான பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் குடிநீரை தயாராக வைத்துக்கொள்ளவும், அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க ‘வார் ரூம்’ செயல்படுகிறது என்றும், நிவாரணப் பொருட்களுடன் மீட்பு வாகனங்கள், டீசல், மின்சாதனப் பொருட்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அகற்ற தேவையான கருவிகள் தயாராக உள்ளன என்றும் அவர் கூறினார்.