நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ள இண்டி கூட்டணியின் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என்று டில்லி வர்த்தகர்கள் ராகுல் காந்தியிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை காலத்தில் பேரணி நடந்தால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு ரூ.10,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், தலைநகர் டில்லி ராம்லீலா மைதானத்தில் நவ.1 அன்று பேரணி நடத்த இண்டி கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதில் 10 லட்சம் பேர் பங்கேற்கலாம் என்றும், சுமார் 20,000 பஸ்கள் டில்லிக்குள் நுழையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு மத்திய டில்லியில் சாலை தடுப்புகள் அமைத்தல், மெட்ரோ நிலையங்களை மூடுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக போலீசார் தயாராகி வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் தினமும் அதிகரிப்பதால், பேரணி நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள சுமார் 5 கிமீ பரப்பளவில் வர்த்தகம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாந்தினி சவுக், சதர் பஜார், சாவ்ரி பஜார், காஷ்மீர் கேட் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் ஒட்டு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை பாதியாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லி வர்த்தக தொழில்சபை அனுப்பிய கடிதத்தில், சுமார் 20 லட்சம் வர்த்தகர்களின் வருமானம் பாதிக்கப்படும் என்றும், கடந்த 25 நாட்களில் மட்டும் டில்லி வர்த்தகத்தில் ரூ.3,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அனுப்பிய கடிதத்தை ராகுல் நிராகரித்ததாக கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் வேறு நாளில் பேரணி நடத்துமாறு கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.