எஸ்ஐஆர் நடவடிக்கைகள் தொடர்பாக வெளியான உத்தரவுகள் மற்றும் முடிவுகள் அனைத்தும் ஒருமனதாக எடுக்கப்பட்டவை என இந்திய தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அது மறுத்துள்ளது.

கடந்த 10 மாதங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து மற்ற இரு தேர்தல் கமிஷனர்கள் பலமுறை ஆட்சேபனை தெரிவித்ததாக நாளிதழில் வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கை கோரின.

இந்த நிலையில், பீஹாரின் பாட்னாவை சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்றும் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து, வழக்கு முடியும் வரை ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என கோரினர். இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், 2025 ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் எஸ்ஐஆர் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அனைத்தும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டவை என கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவிலிருந்து வரும் கோப்புகள் முதலில் ஒரு தேர்தல் கமிஷனருக்கும், பின்னர் மற்றொரு தேர்தல் கமிஷனருக்கும், இறுதியாக தலைமை தேர்தல் கமிஷனருக்கும் செல்லும் நடைமுறை இருப்பதாகவும், அங்கீகரிக்கப்பட்ட முடிவுகள் கையெழுத்துகளுடன் கோப்புகளில் பதிவு செய்யப்பட்ட பின்பே செயலகம் அறிவித்து நடைமுறைப்படுத்தும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

மேலும், முடிவெடுக்கும் செயல்முறையில் பரிமாறப்படும் பரிந்துரைகள் அல்லது கருத்துகள் 2023 சட்டத்தின் படி தேர்தல் கமிஷனின் “முடிவு” ஆக கருதப்படாது எனவும், மனுக்கள் நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டவை என்பதால் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பார்ம் 6 தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்ததாகவும், அந்த படிவத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.