கிரானைட் வீரமணி தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ)க்கு மாற்றக் கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வாராகி தாக்கல் செய்த மனுவை நீதிபதி வி. லட்சுமி நாராயண் விசாரித்தார். விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்து புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அந்த கூடுதல் மனுவில், வழக்கை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, வீரமணியின் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக கூறப்படும் ரூ.147.87 கோடி மதிப்புள்ள சொத்துகள் கைமாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், வழக்கை முடிக்க பெறப்பட்டதாக கூறப்படும் லஞ்சப் பணத்தில் சென்னை பிரபல நகைக்கடையில் இருந்து ரூ.24 கோடிக்கு தங்கம் வாங்கியதாக ஐபிஎஸ் அதிகாரி அருண் மீது தகவல் இருப்பதாக மனுதாரர் தரப்பு கூறியது. இந்த பணம் பிரகாஷ் கண்ணையா வழியாக கைமாறியதாகவும், விசாரணை தொடங்கியதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியதாகவும் குறிப்பிடப்பட்டது.
லஞ்சப் பணத்தை மறைக்கவே தங்கம் வாங்கப்பட்டதா என்பதை அறிய நகைக்கடை ரசீதுகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என கூடுதல் மனுவில் வலியுறுத்தப்பட்டது.




