ஜிஎஸ்டி (GST) சட்டத்தில் செய்யப்பட்ட புதிய திருத்தங்கள் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய நிதி அமைச்சகம் அரசிதழ் அறிவிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள், அக்டோபர் 8 அன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 57வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து வருகிறது. ஜிஎஸ்டியில் உள்ள முரண்பாடுகளை குறைக்கும் வகையில் புதிய நடைமுறைக்கு அக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படும் நோட்டீஸ்களின் எண்ணிக்கை குறையும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. அரசிதழில் வெளியான அறிவிப்பின்படி, ஜிஎஸ்டி சட்டத்தின் 153 முதல் 155 வரையிலான திருத்தப் பிரிவுகள் அமலுக்கு வருகின்றன.
அறிவிப்பில் கூறப்பட்டபடி, விற்பனைக்குப் பிந்தைய தள்ளுபடிகளை கணக்கில் கொண்டு வரி மதிப்பை குறைப்பது, கிரெடிட் நோட் வழங்குவது போன்ற செயல்முறைகள் எளிதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படாத உள்ளீட்டு வரிக்கடனில் 90% வரை திரும்பப் பெறுதல் மற்றும் ஏற்றுமதி வரி திரும்பப் பெறுதலில் சில வரம்புகளை நீக்குதல் போன்ற அம்சங்களும் சீர்மையாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.




