ஐநா பாதுகாப்பு சபையை (UNSC) சீர்திருத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு சபையின் அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்க வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ், வீட்டோ அதிகாரம் பாதுகாப்பு சபையின் நடைமுறையில் தொடரும் வரை, விரிவாக்கப்பட்ட மற்றும் சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு சபையில் உள்ள அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும், தற்போதைய ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்—அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ்—குறுகிய அரசியல் ஆதாயங்களுக்கான கருவியாக வீட்டோவை பயன்படுத்தாமல் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு சபையின் தற்போதைய கட்டமைப்பு 1945-ஆம் ஆண்டின் புவிசார் அரசியல் சூழலை பிரதிபலிப்பதாகவும், இன்றைய உலகளாவிய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் அது விரிவான முறையில் மாற்றப்பட வேண்டும் என்றும் ஹரிஷ் தெரிவித்தார். புதியதாக உருவாக்கப்படும் நிரந்தர உறுப்பினர் இடங்களுக்கும் வீட்டோ அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.




