ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஜோதிடரும் சமூக ஊடக இன்ப்ளூயன்சருமான ஓம்பிரகாஷ் பிஷ்னோய்க்கு உள்ளூர் தேர்தலில் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டுள்ளது. இணையத்தில் உள்ள பெரும் செல்வாக்கு, வாக்குப்பெட்டியில் அதேபடி பிரதிபலிக்கவில்லை.
ஜோத்பூர் மாவட்டம் ஓசியன் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டார். அந்த கிராமத்தில் சுமார் 1,600 வாக்காளர்கள் உள்ள நிலையில், அவருக்கு கிடைத்தது வெறும் 33 ஓட்டுகள் மட்டுமே.
மேலும், அந்த 33 ஓட்டுகளில் 11 ஓட்டுகள் தன் குடும்பத்தினரிடமிருந்து வந்ததாக பிஷ்னோய் தெரிவித்தார். இன்ஸ்டாகிராமில் 14 லட்சம், பேஸ்புக்கில் 2.32 லட்சம், யூடியூபில் 5 லட்சத்துக்கும் அதிகம் என மொத்தம் சுமார் 21 லட்சம் பின்தொடர்வோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற தலைப்புகளில் அவர் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். தோல்வியை ஏற்றுக்கொண்ட பிஷ்னோய், இணையத்தில் ஆதரவு இருந்தாலும் சொந்த கிராம மக்களின் ஆதரவைப் பெற முடியவில்லை என தெரிவித்தார்; ‘லைக்’களும் பார்வைகளும் நேரடியாக ஓட்டுகளாக மாறாது என்பதைக் காட்டும் நிகழ்வாக இது பேசப்படுகிறது.




