கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை கால தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு அக்.29 அன்று தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பதிவு செய்யப்பட்ட நேர இடைவெளிகளின் அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல–மகர விளக்கு பூஜை காலம் நவ.16 அன்று தொடங்குகிறது.
போர்டு அறிவிப்பின்படி, அக்.29 காலை 10.00 மணிக்கு www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு திறக்கப்படும்.
பாதை வாரியாக தினசரி அனுமதி வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது: நிலக்கல்–பம்பை பாதை வழியாக தினமும் 60,000 பேர் வரை; எருமேலி பெருவழிப் பாதை மற்றும் வண்டிப்பெரியாறு–சத்திரம் பாதை வழியாக தலா 3,000 பேர் என அனுமதி வழங்கப்படும்.
மேலும், நிலக்கல், எருமேலி மற்றும் வண்டிப்பெரியாறு பகுதிகளில் ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




