தேனி மாவட்ட சிறையில் இருந்து 15 கைதிகள் நள்ளிரவில் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே அமைந்துள்ள இந்த மாவட்ட சிறையில் நான்கு பிளாக்குகள் உள்ளன. நேற்று இரவு 3-ம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ. மதன்மோகன் அந்த பிளாக்கை திறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அப்போது உள்ளிருந்த கைதிகள் மதன்மோகனை தாக்கி வெளியே வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கதவு அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் தங்கபாண்டியையும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு கைதிகள் சிறையிலிருந்து தப்பியோடினர்.

காயமடைந்த மதன்மோகன் மற்றும் தங்கபாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறையிலிருந்து 10 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதிகளை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மாவட்டம் முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி, மலைப்பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.