சென்னை: உதயநிதி அறக்கட்டளையுடன் தொடர்புடையதாக கூறப்படும் ரூ.1,000 கோடி முதலீடு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிக்கல்வித் துறையில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு புகாரின் அடிப்படையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டதை வரவேற்றார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், 2023-ல் ‘தி.மு.க. பைல்ஸ்’ வெளியிட்டபோது தமிழகத்தில் ‘நோபல் ஸ்டீல்’ நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு குறித்து கேள்வி எழுப்பியதாக நினைவூட்டினார். அப்போது உரிய விளக்கம் தரப்படவில்லை என்றும், அந்த முதலீடு தமிழகத்துக்கு வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேபோல், நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான ‘நோபல் பிரிக்ஸ்’ இயங்கி வந்த முகவரியிலேயே உதயநிதி அறக்கட்டளையும் இயங்கியதாக கூறப்பட்ட தகவலுக்கு இதுவரை பதில் இல்லை என தெரிவித்தார். நோபல் பிரிக்ஸ் நிறுவனத்துக்கும் உதயநிதி அறக்கட்டளைக்கும் இடையிலான தொடர்பு மற்றும் ரூ.1,000 கோடி முதலீடு குறித்த விவகாரங்களில் அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




