வெள்ளைச் சரளைக் கற்களுக்கு நடுவே தொலைந்த வெள்ளை இயர்பட்டை, சாட்ஜிபிடி உதவியுடன் சில நிமிடங்களில் கண்டுபிடித்ததாக கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தகவலின்படி, பூங்காவிலிருந்து மகனுடன் திரும்பும்போது ஓடிச் சென்ற மகனை துரத்திச் சென்ற தந்தையின் பாக்கெட்டிலிருந்த இயர்பட் பெட்டி கீழே விழுந்து திறந்தது. அதில் இருந்த ஒரு இயர்பட் சரளைக் கற்களுக்குள் தெறித்து விழுந்ததாக கூறப்படுகிறது.
அந்தி சாயும் நேரத்தில் வெளிச்சம் குறைந்ததால், அவர் சுமார் 10 நிமிடம் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் சரளைக் கற்களை படம் எடுத்து சாட்ஜிபிடியில் பதிவேற்றி நடந்ததை தெரிவித்தார்.
மேலும் நெருக்கமான (குளோஸ்-அப்) படங்களை அனுப்புமாறு சாட்ஜிபிடி கேட்டதாகவும், அவற்றை அனுப்பிய ஒரு நிமிடத்துக்குள் இயர்பட் இருக்குமிடத்தை அது காட்டியதாகவும் கூறப்படுகிறது. படத்தின் தரம் மற்றும் வெளிச்சம் போன்றவற்றைப் பொறுத்தே செயற்கை நுண்ணறிவின் துல்லியம் அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




