வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை எண்ணூர் கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை இரவு கடல் சீற்றம் கடுமையாக உயர்ந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆந்திர கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, இரவு 8 மணியளவில் எண்ணூரில் பாரதியார் நகர் முதல் தாழங்குப்பம் வரை ஆக்ரோஷ அலைகள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அலைகள் தடுப்புக் கற்களை தாண்டி 10 அடி உயரத்துக்கு மேல் எழுந்து, எண்ணூர் கடற்கரை சாலையை கடந்தும் பாரதியார் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக மக்கள் கூறினர்.
சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டன. தொடர்ந்து சீற்றம் நீடித்ததால் எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, வாகனங்கள் கத்திவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.




