வங்கக்கடலில் உருவான மிகத் தீவிர புயலான ‘அர்னாப்’, பாபட்லா–விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே நள்ளிரவு கரையை கடக்கத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4 மணியளவில் புயலின் மையப்பகுதி கரையை நெருங்கிய நிலையில், அடுத்த மூன்று மணி நேரம் கரையை கடக்கும் நிகழ்வு தொடரும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மணி நேரத்தில் புயல் வேகமாக வலுப்பெற்று ஆந்திர கடலோரத்தை நோக்கி அதிவேகமாக நகர்ந்ததாக வானிலை மையம் தெரிவித்தது. அக்டோபர் 28 முற்பகலில் கரையை கடக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேகம் அதிகரித்ததால் முன்கூட்டியே கரையை கடக்கத் தொடங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
புயலின் வெளிப்பகுதி நிலப்பரப்பைத் தொட்டுள்ள நிலையில், கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 115–125 கி.மீ வேகத்தில் காற்றும், இடையிடையே 140 கி.மீ வரை சூறாவளிக் காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கத்தால் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் ஏனாமில் அக்டோபர் 27, 28 தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒடிசாவில் அக்டோபர் 28, சத்தீஸ்கரில் 28, 29, கிழக்கு உத்தரபிரதேசத்தில் அக்டோபர் 29 அன்று பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக விசாகப்பட்டினம்–விஜயவாடா இடையேயான ஏர் இந்தியா விமான சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது; பயணிகள் விமான நிலவரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணமாக தெற்கு கடற்கரை ரயில்வே அக்டோபர் 27, 28 தேதிகளில் இயக்கப்படவிருந்த 53 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதனிடையே மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வதந்திகள் பரப்ப வேண்டாம் என ஒடிசா அரசு எச்சரித்துள்ளது.




