ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், உலகிலேயே முதல் முறையாக 24 காரட் சுத்த தங்கத்தில் உருவாக்கப்படும் நடைபாதை கட்டப்பட்டு வருகிறது. இது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம் மற்றும் சுற்றுலா மையமாக துபாய் உலகளவில் பெயர் பெற்றுள்ளது. குறிப்பாக தங்க வணிகத்தில் முன்னணியில் இருக்கும் துபாயில், தங்கம் மற்றும் நகைகள் வாங்குவதற்கு வரி இல்லாததும், இறக்குமதி தங்கத்திற்கு கடுமையான வரிகள் இல்லாததும் விலையை பல நாடுகளை விட குறைவாக வைத்திருக்கிறது.

இந்த விலை சாதகத்தால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்க துபாயை நாடுகின்றனர். இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், தெய்ரா பகுதியில் இந்தாண்டு ஜனவரியில் தங்க விற்பனை மாவட்டம் தொடங்கப்பட்டது.

அங்கு தங்கம், ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான 1,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ‘தங்க நகர’ புகழை மேலும் உயர்த்தவும் சுற்றுலாவை கவரவும், உலகின் மிக நீளமான 24 காரட் தங்க நடைபாதை என விளம்பரப்படுத்தப்படும் இந்த திட்டம் விரைவில் திறக்கப்பட உள்ளது.