உலகளாவிய சவால்களுக்கு தீர்வு தரும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே இந்தியாவின் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டில்லியில் நடைபெற்ற அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை தொடங்கி வைத்து அவர் இதை கூறினார்.

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி சுகாதாரம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளை மாற்றி அமைக்கும்; கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என அவர் பேசினார். இத்தகைய துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மகிழ்ச்சி தருவதாகவும் குறிப்பிட்டார்.

மூளையின் செயல்பாட்டை அறியும் தொழில்நுட்பங்களில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஈடுபட்டிருப்பதையும், கம்பியில்லா இணைப்பு மற்றும் செயற்கைக்கோள் வழி தகவல் தொடர்பில் தீர்வுகள் உருவாகி வருவதையும் அவர் எடுத்துக்காட்டினார். குறிப்பிட்ட உணவுத் தேவைகளை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்து தயாரிப்புகள் உருவாக்கப்படுவது, செமிகண்டக்டர் துறையில் இந்திய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, தொழிற்சாலை கழிவுகளை பயன்படுத்தும் தீர்வுகள் குறித்த ஆய்வுகள் நடைபெறுவது ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சென்னை ஐஐடியில் தாம் திறந்து வைத்த அதிநவீன மூளை ஆராய்ச்சி மையத்தை நினைவூட்டிய மோடி, உலகத்தரத்திற்கு இணையாக மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை ஆராயும் தொழில்நுட்பங்கள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மனித மூளையின் முப்பரிமாண டிஜிட்டல் படங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், திட்டம் வெற்றி பெற்றால் மூளை தொடர்பான பல்வேறு நோய்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.