ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. சீன் கேனரி, ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோருக்குப் பிறகு கடைசியாக டேனியல் கிரெய்க் இந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

அடுத்ததாக யார் ஜேம்ஸ்பாண்ட் ஆக வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. வரவிருக்கும் புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்குநர் டெனிஸ் வில்லெனோவ் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், கலம் டர்னர், ஜாக் லோடன், ஜோஷ் ஓ’கானர் உள்ளிட்ட நடிகர்கள் பரிசீலனையில் இருந்து ஸ்கிரீன் டெஸ்ட்டில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் லோடன் மற்றும் ஓ’கானர் ஆகியோரிடம் ஸ்கிரீன் டெஸ்ட் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆன்லைனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக ஜாக் லோடனை 67% பேர் ஆதரித்ததாகவும், இதனால் தேர்வு பட்டியலில் அவர் முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தொடர்கின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

லோடன் தேர்வானால், கேனரிக்குப் பிறகு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த நடிகர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்கும் பெருமை அவருக்கு கிடைக்கும். 1990ல் ஸ்காட்லாந்து பெற்றோருக்கு பிறந்த லோடன், மேடை நாடகங்களிலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்; சில படைப்புகளுக்கு விருதுகளும் பெற்றுள்ளார். பல நாடகங்களில் உளவாளி கதாபாத்திரங்களிலும் அவர் நடித்ததாக குறிப்பிடப்படுகிறது.