பெங்களூரூ: கர்நாடகாவில் 4 மேல்சபை தொகுதிகளுக்கான தேர்தல் அக்.23 அன்று ஓட்டுச்சீட்டு முறையில் நடைபெற்றது. இதில் பாஜ மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ஆளும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது.
பெங்களூரூ தொகுதியில் ஜேடிஎஸ் வேட்பாளர் ஏ.பி. ரங்கநாத், தற்போதைய காங்கிரஸ் எம்எல்சி புட்டன்னாவை 908 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
வடகிழக்கு ஆசிரியர்கள் தொகுதியில் பாஜ எம்எல்சி ஷஷில் ஜி. நமோஷி, காங்கிரஸ் வேட்பாளர் ஷரணப்பா மத்தூரை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் அந்தத் தொகுதியில் 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியிலும் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது; ஒரு தொகுதியை பாஜ தக்க வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த முடிவு மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். இதற்கிடையில், ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தபோதும் காங்கிரஸ் தோற்றுள்ள நிலையில், இனியும் ஓட்டு திருட்டு என குற்றம்சாட்ட முடியுமா என்று ஜேடிஎஸ் தலைவர் நிகில் குமாரசாமி கேள்வி எழுப்பினார்.




