சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான மிக தீவிர புயல் ‘அர்னாப்’ வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 28 அதிகாலை ஆந்திரப் பிரதேசம்–ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு தொடர்ந்து வலுவிழக்கும் எனவும், அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் தளர்ந்து புயலாகக் குறையக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதற்கிடையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நவம்பர் 3 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.