முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள சில முன்னாள் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை வரக்கூடும் என்ற அச்சம் கட்சிக்குள் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கட்சியின் மேல்மட்டத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தகவலின்படி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த கைது நடவடிக்கையால் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், அவர் அறிவாலயத்திற்கு செல்லாமல் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டசபையில் முதல்வர் விஜய், “மூன்று ஊழல் கோப்புகள் என் மேஜையில் உள்ளன; உரிய நேரத்தில் வெளியிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு சவால் விடுத்தார். பின்னர் நிதியமைச்சர் மரிய வில்சன், அந்த கோப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

அன்பில் மகேஷ் திமுகவில் இளைய தலைமுறையின் முக்கிய முகமாகவும், உதயநிதிக்கு நெருக்கமானவராகவும் பார்க்கப்படுவதால், அவரது கைது மேல்மட்டத்துக்கு விடப்பட்ட “சிக்னல்” என கட்சிக்குள் பேசப்படுகிறது. இதற்கிடையில் நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் மறு ஆய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக துணை பொதுச்செயலர் ஆ.ராஜா உள்ளிட்டோர் மீது இந்த ஆட்சியில் வழக்குகள் உள்ள நிலையில், சட்ட ரீதியான பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.