ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம்–பாம்பன் இடையே கடலில் 1914ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ரயில் பாலம் அமைத்தனர். அதன் நடுப்பகுதியில் இருந்த துாக்கு (திறக்கக்கூடிய) பகுதி ராமேஸ்வரம் தீவின் அடையாளமாகவும் பார்க்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜெர்மன் பொறியாளர் ஜெர்சர் இந்த பாலத்தை வடிவமைத்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரது பெயரே பாலத்துடன் இணைந்து நிலைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு, 2025 ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய பாலத்தின் நடுவில் செங்குத்தாக இயங்கும் லிப்ட் போன்ற அமைப்பில் துாக்கு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது; இதில் மும்பை ஐ.ஐ.டி. மற்றும் ரயில்வே கட்டுமான பிரிவு பொறியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதிய துாக்கு பாலத்துக்கும் பழைய பாலத்தை வடிவமைத்த ஜெர்சர் பெயரை ரயில்வே நிர்வாகம் சூட்டி, துாக்கு பகுதி அருகிலுள்ள கட்டடத்தில் பெயர் பலகையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் முயற்சியில் ரூ.531 கோடியில் நாட்டு பொறியாளர்கள் கட்டிய புதிய பாலத்திற்கு வெளிநாட்டு பொறியாளர் பெயர் வைப்பதற்கு சேவா பாரதி அமைப்பின் சுடலை உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பெயரை மாற்றுமாறு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




