புதுடில்லி: இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா ஆக்கிரமித்ததாக கூறி, ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை காங்கிரஸ் பரப்பியதாக குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அக்கட்சி நாட்டுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பீஹாரைச் சேர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரிது சவுத்ரி, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இரண்டு வீடியோக்களை பகிர்ந்து, சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்ததாகவும் பதிவிட்டார். மேலும், லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போல ‘மார்பிங்’ செய்யப்பட்ட வீடியோவையும் அவர் பகிர்ந்ததாக கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த இந்திய ராணுவம், சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட வீடியோக்கள் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், அவை தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும் தெரிவித்தது. சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் இந்தியா–சீனா இடையே அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எல்லை வர்த்தகப் பகுதி; அங்கு வழக்கமாக செல்லும் வணிக வாகன இயக்கத்தை சீன ராணுவ ஊடுருவல் என தவறாக சித்தரித்து வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக ராணுவம் விளக்கம் அளித்தது.

மேலும், ‘ஸ்பியர் கார்ப்ஸ்’ படைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் காலியா பேசுவது போல வெளியான வீடியோவும் முற்றிலும் போலியானது என ராணுவம் கூறியது. அந்தக் காட்சி 2023 அக்டோபரில் எடுக்கப்பட்டதாகவும், ஜம்மு–காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் நடந்த ஊடுருவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் அளித்த பேட்டியிலிருந்து எடுத்ததாகவும், அருணாச்சலப் பிரதேசம் அல்லது வீரர்களுக்கான தளவாடங்கள் மறுக்கப்படுவது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்தது.

ராணுவத்தின் இந்த விளக்கத்துக்குப் பிறகு பேசிய ரிஜிஜு, ஆயுதப் படைகளின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களை பரப்புவது கடுமையான செயல் என கூறி, காங்கிரஸ் உடனடியாக நாட்டுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.