ரியாத்திலிருந்து வெளியாகும் தகவல்களின்படி, தங்கள் நாட்டை குறிவைத்து நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தும் நோக்கில், ஹவுதி அமைப்புக்கு ஈரான் வழியாக ரூ.9,500 கோடி வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்காசிய நாடான ஏமனில், அந்நாட்டு அரசு மற்றும் ஹவுதி அமைப்பு இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவளித்து வருவதுடன், ஹவுதி அமைப்புக்கு ஈரான் ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் ஏமனின் முக்கிய பகுதிகளை ஹவுதி அமைப்பு கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஹவுதியுக்கு எதிராக ஏமன் அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது; அதற்கு சவுதியும் உதவியது. இதன் பின்னணியில், சவுதி மீது ஹவுதி தாக்குதல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் ஆலைகளை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தாக்குதல்களை நிறுத்த ஈரான் மத்தியஸ்தத்துடன் பணம் வழங்கும் முயற்சியாக இந்த முன்மொழிவு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.




