நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் கட்டாய சேவை செய்யும் விவகாரத்தில், அரசியல் சாசன கோட்பாடுகளின் அடிப்படையில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக மருத்துவக் கவுன்சிலில் நிரந்தரப் பதிவு பெற, மருத்துவ மாணவர்கள் ஓராண்டு வரை கிராமப்புற மக்களுக்கு கட்டாய சேவையாற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் அராதே அமர்வு, நாட்டின் நலனுக்கும் சுகாதார மேம்பாட்டுக்கும் கிராமப்புற சேவை அவசியமா என்பதை ஆராய்வதற்காகவே இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டது. சுகாதாரம் அனைவருக்குமான அடிப்படை உரிமை என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவாக சிந்திக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
கிராமப்புற சேவை குறித்து மத்திய அரசு தெளிவான கொள்கையை வகுக்க உள்ளதா, யாரிடம் ஆலோசிக்கப் போகிறது என்பதையும் விளக்க வேண்டும் என்று அமர்வு கேட்டது. மாநில அரசுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துடன் ஆலோசித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும்; இல்லையெனில் உச்ச நீதிமன்றமே அவற்றை வகுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்த வழக்கு ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.




