தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில், தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவுகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும், அதுவரை VVPAT சீட்டுகளின் 100% எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையையும் பாதுகாக்க அரசியலமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கைக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்களில் பயன்படுத்தக் கூடாது என்றும், நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், ECINET மற்றும் ERONET ஆகிய அமைப்புகளை தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில்லாத வல்லுநர்களைக் கொண்டு தடயவியல் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தில் தனிநபர் ஆதிக்கம் ஏற்படாமல், கூட்டு முடிவெடுக்கும் முறையை உறுதி செய்ய வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளது.

இறுதியாக, தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாதது மற்றும் அதனால் தேர்தல் முடிவுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து உச்சநீதிமன்றக் கருத்தைப் பெற வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.