தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ ரிக்ஷா கட்டணம் திருத்தப்பட்டு, நேற்றிரவு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய கட்டணப்படி முதல் 1.8 கி.மீ. தூரத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் ரூ.25 வசூலிக்கப்படும்.

இதற்கு முன் 2013 ஆகஸ்டில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டபோது, 1.8 கி.மீ.க்கு ரூ.25 குறைந்தபட்சமாகவும், அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் விலை உயர்வு, காப்பீடு, வாகன பராமரிப்பு செலவுகள் மற்றும் உதிரிபாக விலை உயர்வு போன்ற காரணங்களை முன்வைத்து கட்டண உயர்வு கோரி ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

மேலும், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் நலன்களை சமநிலைப்படுத்தி கட்டணத்தை திருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் 2022 பிப்ரவரியில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சங்கங்களின் தொடர்ந்த கோரிக்கைகளைத் தொடர்ந்து தற்போது கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மாநில போக்குவரத்து ஆணையமும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி இரவு 10:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை வழக்கமான கட்டணத்தை விட 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்; காத்திருப்பு கட்டணம் நிமிடத்திற்கு ரூ.1 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.