தேனி மாவட்ட சிறையிலிருந்து நள்ளிரவில் 17 கைதிகள் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியவர்களில் ஒருவர் பின்னர் சரணடைந்ததாகவும், இதுவரை மொத்தம் 13 பேர் மீண்டும் காவலில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி அருகே உள்ள இந்த மாவட்ட சிறையில் நான்கு பிளாக்குகள் உள்ளன. 3-ஆம் பிளாக்கில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ. மதன்மோகன் அந்த பிளாக்கை திறந்தபோது சம்பவம் தொடங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது சில கைதிகள் சிறப்பு எஸ்.ஐ.யை தாக்கி வெளியே வந்ததாகவும், கதவு அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் தங்கபாண்டியையும் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த மதன்மோகன் மற்றும் தங்கபாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிறை சுற்றுவட்டார 10 கி.மீ. பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதித்து, மாவட்டம் முழுவதும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
சிறையில் ஆய்வு மேற்கொண்ட ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, தப்பியவர்களை பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டிரோன் மூலம் நடத்தப்பட்ட தேடுதலில் வனப்பகுதியில் தங்கியிருந்த மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள 4 பேரை பிடிக்க நடவடிக்கை தொடர்வதாகவும் அதிகாரிகள் கூறினர்.




