தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து தப்பிய 17 விசாரணை கைதிகளும் தற்போது பிடிபட்டு காவல் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
இந்த சிறையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகளும் இங்கு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பிளாக்கில் 92 கைதிகள் இருந்தனர்.
அக்.26 இரவு 10 மணியளவில் முத்து இளங்கோவன் (23) வலிப்பு வந்தது போல நடித்து, சிறைக் காவலர்கள் வந்தபோது 17 பேர் சேர்ந்து மதன்மோகன், ஸ்டாலின் பிரபு, தங்க பாண்டி ஆகிய காவலர்களை தாக்கிவிட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தப்பியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 15 பேர் சிக்கிய நிலையில், மீதமிருந்த நால்வரிலும் கன்னியாகுமரியைச் சேர்ந்த ரெஜின் மற்றும் மதுரையைச் சேர்ந்த பொன் முத்து செல்வம் ஆகியோர் அமச்சியாபுரம் மலைப்பகுதியில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் இருவர் கம்பம் காவல் நிலையத்தில் சரணடைந்ததால், தப்பிய 17 பேரும் முழுமையாக சிக்கியுள்ளனர்.




