புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் மகேஷை, தி.மு.க. இளைஞர் அணி செயலர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடுத்த ஓரிரு நாட்களில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மதியம் 12.30 மணியளவில் உதயநிதி சிறைக்கு சென்று, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோருடன் மகேஷை சந்தித்தார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததாக கூறப்படுகிறது.
சிறையிலிருந்து வெளியே வந்த உதயநிதி, அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளிடம் கோபமாக பேசிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, காவல்துறை அழைத்த போதெல்லாம் மகேஷ் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும், அடிப்படை முகாந்திரமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், சிறையில் எந்த கூடுதல் வசதியும் மகேஷ் கேட்கவில்லை; கைது நடவடிக்கை அவரை மேலும் உறுதியாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.




