அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக முன்னணி ஐடி நிறுவனங்களிலும் பணிநீக்கங்கள் தொடர்வதுடன், ஏஐ தொடர்பான முதலீடுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாற்றம் கணினி சார்ந்த வேலைகளுக்கு என்ன அர்த்தம் என்பதைக் குறித்து ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில் கருத்து தெரிவித்தார். கணினியில் செய்யப்படும் பெரும்பாலான பணிகளிலும் இப்போது புதிய வகை ஆபத்து உருவாகியுள்ளது என்றார்.

ஏஐ கருவிகளை பயன்படுத்தினால், முன்பு 10 பேர் செய்ய வேண்டிய அளவிலான பணியை ஒரு திறமையான நபர் செய்து முடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்த ஆபத்து நாளுக்கு நாள் நிஜமாகி வருகிறதெனவும், அதனால் கணினியில் பணிபுரியும் 90% பேருக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்பதல்ல எனவும் விளக்கினார்.

முன்பு மென்பொருள் பொறியாளர்கள் அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களை நியமிக்க முடியாத சில தொழில்துறைகள், இப்போது அவர்களை வேலைக்கு அமர்த்தும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் அவர் எடுத்துக்காட்டினார். மொத்தத்தில் பொருளாதாரத்தில் மறுசீரமைப்பு நிகழும்; அந்த மாற்றக் காலம் சற்று கடினமாக இருக்கலாம் என்றும் கூறினார்.

மாற்றம் வரப்போகிறது என்பதை ஏற்றுக்கொண்டு, அதற்குத் தயாராகுவது தான் நாம் செய்யக்கூடிய முக்கியமான விஷயம் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.