இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா பறப்பை 2026 ஆம் ஆண்டுக்குள் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். திட்டம் திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும், இதுவரை சுமார் 8,000 பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்.30 இரவு 11:51 மணிக்கு ஜிஎஸ்எல்வி-18 ராக்கெட்டில் NVS-03 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளதாக தெரிவித்தார். இது இந்தாண்டில் இஸ்ரோ மேற்கொள்ளும் ஐந்தாவது செயற்கைக்கோள் ஏவுதலாகும்; மேலும் ஒரு தனியார் செயற்கைக்கோளையும் ஏவியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே மூன்று நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், NVS-03 நேவிகேஷன் பயன்பாட்டுக்காக மட்டும் ஏவப்படும் நான்காவது செயற்கைக்கோளாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் நிலைப்படுத்துதல், வழிகாட்டுதல், கால அளவீடு (PNT) உள்ளிட்ட சேவைகள் மற்றும் பல பயன்பாடுகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதால் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், முதலில் மூன்று ஆளில்லா சோதனைப் பறப்புகள் நடத்தப்படும் என்றும், அவை வெற்றியடைந்த பிறகே விண்வெளி வீரர்களை அனுப்ப முடிவு செய்யப்படும் என்றும் அவர் விளக்கினார். இதில் முதல் ஆளில்லா பறப்பு இந்தாண்டுக்குள் நடைபெறும் எனவும் கூறினார்.
மேலும், செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்பட வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயற்கைக்கோள் மாதிரியுடன் இஸ்ரோ குழுவினர் சுவாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.




