இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் அமைப்பான NavIC (நேவிக்) தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் நோக்கில், NVS-03 செயற்கைக்கோளை அக்டோபர் 30 அன்று இரவு 11:51 மணிக்கு இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து GSLV-F18 ராக்கெட் மூலம் இது ஏவப்படவுள்ளது.
இஸ்ரோ தெரிவிப்பின்படி, நேவிக் நெட்வொர்க்கில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, துல்லியமான இருப்பிடச் சேவைகளை மீண்டும் முழுமையாக வழங்குவது இந்தப் பயணத்தின் முக்கிய இலக்காகும். அமெரிக்காவின் GPS தொழில்நுட்பத்திற்கு மாற்றாக நேவிக் உருவாக்கப்பட்டது.
இந்த செயற்கைக்கோளில் அகமதாபாத் இஸ்ரோ மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. துல்லியமான வழிகாட்டுதலுக்குத் தேவையான நேரக் கணக்கீட்டில் இத்தகைய அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
2,232 கிலோ எடை கொண்ட NVS-03 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இருப்பிடச் சேவை மட்டுமின்றி, பேரிடர் மேலாண்மை, ரயில்வே போக்குவரத்து மற்றும் ராணுவம் சார்ந்த பாதுகாப்புத் தேவைகளுக்கும் இது பயன்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.
ஏவுதலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.




