மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், ஜான் டேனியல் என்பவரின் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர் (OCI) பதிவை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வழக்கு பதிவுகளின்படி, ஜான் டேனியல் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட “லேமென்ஸ் இவாஞ்சலிக்கல் பெலோஷிப் இண்டர்நேஷ்னல்” நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்தியாவில் முன் அனுமதி பெறாமல் மதப் பிரசாரம் செய்ததாகக் கூறி, அவரது OCI பதிவு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்த ரத்துச் செயலை ரத்து செய்யக் கோரி ஜான் டேனியல் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். சென்னை நகரில் வசிக்கும் உறவினர்களைச் சந்திக்கவே இந்தியா வந்ததாகவும், எந்தவிதமான மதப் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை என்றும் அவர் மனுவில் கூறினார்.

நீதிபதி டி. பரதசக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, 2018–19 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு வந்த ஜான் டேனியல் மதப் பிரசாரங்களில் ஈடுபட்டதாக மத்திய அரசு தரப்பு வாதிட்டு, அதற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்தது.

குடியுரிமை சட்டத்தின் படி மதப் பிரசாரத்திற்கு மத்திய அரசின் முன் அனுமதி கட்டாயம் என்றும், அனுமதி இன்றி அவர் பிரசாரத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. எனவே OCI பதிவை ரத்து செய்தது சரியானதே எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், தாயைச் சந்திக்க வழக்கமான விசாவுக்கு விண்ணப்பித்து அவர் இந்தியா வரலாம் என்றும் தெரிவித்தது.