சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம், முன்னாள் திமுக அமைச்சர் மகேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனுவின் விசாரணையை நவம்பர் 2 (திங்கட்கிழமை)க்கு ஒத்திவைத்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் முதலில் திமுக செய்தி தொடர்பு குழு துணை தலைவர் அரசகுமார் (58) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இந்த மோசடிக்கு முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் (48) மற்றும் முன்னாள் அமைச்சர் மகேஷ் (48) மூளையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மகேஷ் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக எம்எல்ஏ முத்துகுமார் சரண் அடைந்துள்ளார். சிறையில் உள்ள மகேஷ் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் நவம்பர் 2க்கு விசாரணைக்கு எடுத்துள்ளது.




