திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், அரசியல் லாபத்திற்காக தி.மு.க.வினர் எதையும் பேசுவார்கள் என விமர்சித்தார். தமிழகத்தில் எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கும் அவர் பதிலளித்தார்.
‘விடியல் ஆட்சி’ என்ற பெயரில் நடந்த ஆட்சியில் விடியலே இல்லாததால் தான் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினர் என அமைச்சர் ரமேஷ் கூறினார்.
மேலும், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் நிர்வாகம் திருச்சி மாநகராட்சிக்கு சுமார் ரூ.3 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தீர்வு காணப்படும் என்றார்.
மழை காரணமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்தில் சில இடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளதாகவும் கூறினார். கோபுரத்தை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




