புதுடில்லி: புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 543 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லரை விலையை (MRP) தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) திருத்தியுள்ளது. இதன் மூலம் சில மருந்துகளின் விலை 93% வரை குறைந்துள்ளதாகவும், திருத்தப்பட்ட விலைகள் நவம்பர் 9 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து விலை நிர்ணயம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில், புற்றுநோய் மருந்துகளின் விற்பனையில் வர்த்தக லாப வரம்பை MRP-யின் 30% ஆக நிர்ணயிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, மற்ற மருந்துகளுக்கும் இதுபோன்ற வரம்பை நிர்ணயிக்க முடியாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட பட்டியலின்படி, சில முக்கிய மருந்துகளின் விலை 70% முதல் 93% வரை குறைக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய்க்கான ‘பால்போசிக்லிப்’ மருந்தின் ஒரு பிராண்டு பாக்கெட் விலை ரூ.40,421-இல் இருந்து ரூ.2,720 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ‘கீமோதெரபி’ சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘தியோடெபா’ மருந்தின் ஒரு குப்பி விலை ரூ.80,072-இல் இருந்து ரூ.7,150 ஆக குறைந்துள்ளது. ‘டசாடினிப், லென்வாடினிப், அபிராடெரோன், ஒலாபரிப்’ உள்ளிட்ட மருந்துகளின் விலையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், சில முக்கிய மருந்துகளின் விலையில் மாற்றமில்லை. ‘கீட்ரூடா’ மருந்தின் விலை ஒரு குப்பிக்கு ரூ.2,16,500 என்ற நிலை தொடர்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் ‘ரிபோக்சிக்லிப்’ மருந்தின் விலையும் ரூ.24,435 ஆக நீடிக்கிறது. ‘டாக்ரிசோ, டெசென்ட்ரிக், டார்சலெக்ஸ், இம்பின்ஸி’ உள்ளிட்ட சில மருந்துகளிலும் மாற்றம் இல்லை.

இந்த விலை குறைப்பின் மூலம் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மருத்துவச் செலவு மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, பரிசோதனைகள், மருத்துவமனைச் செலவுகள் போன்றவை சேர்ந்து மொத்தச் செலவை நிர்ணயிப்பதால், விலை குறைப்பின் பலன் உண்மையில் நோயாளிகளுக்கு எவ்வளவு அளவில் சென்றடைகிறது என்பதே முக்கியம் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.