புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) நடத்தும் முதல் நாகரிக பாரம்பரிய மன்றத்தில் பங்கேற்க பாகிஸ்தான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 நாடுகள் இடம்பெற்றுள்ள எஸ்.சி.ஓ., பிராந்திய நல்லுறவு மற்றும் உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. செப்டம்பர் 1 முதல் இந்த அமைப்பின் தலைமை பொறுப்பை பாகிஸ்தான் வகிக்கிறது.
டெல்லியில் உள்ள 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த புரானா கிலா கோட்டையில், நவம்பர் 20 முதல் 22 வரை மூன்று நாட்கள் இந்த மன்றம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதுடன், பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க உள்ளார்.
உறுப்பு நாடுகளுக்கிடையிலான நாகரிக தொடர்புகள், கலாசார உறவுகள், பாரம்பரிய அறிவு முறைகளில் கூட்டாக செயல்படுதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மத்திய கலாசார அமைச்சகம் நிகழ்ச்சியை நடத்துகிறது.
எஸ்.சி.ஓ.வின் 10 உறுப்பு நாடுகளின் கலாசார அமைச்சர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கலாசாரத் துறை அமைச்சர் அவுரங்கசீப் கான் கிச்சி உள்ளிட்டவர்களுடன், ரஷ்யா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பாகிஸ்தான் அமைச்சர் பங்கேற்ற கடைசி முக்கிய எஸ்.சி.ஓ. கூட்டமாக 2023ல் கோவாவில் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் குறிப்பிடப்படுகிறது; அதில் பிலாவல் பூட்டோ பங்கேற்றிருந்தார்.




