அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி, அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததையடுத்து காலியாகியுள்ளது. இதேபோல் மேலும் நான்கு அதிமுக எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ததால் மொத்தம் ஐந்து தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த ராஜினாமா விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு முடிந்த பிறகு காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடலாம் என்ற செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்” என்று கூறினார். மேலும், தன்னைப் பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், உறவுகள் வேறு; அரசியல் நிலைப்பாடு வேறு என்றும் தெரிவித்தார். அனைத்து தேர்தல்களிலும் தன்னை “பொது வேட்பாளர்” என்றே கருதுவதாகவும் கூறினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.