சென்னையில் வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர் கலையரசனை சீருடை அணியாத போலீசார் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக வந்த செய்தி தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் குற்றப் பின்னணி கொண்டவர் அல்ல என்றும், மாநிலத்தின் முக்கியமான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் கல்வியாளர் என்றும் அவர் கூறினார். மேலும், முதல்வர் தலைவராக உள்ள தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக கலையரசன் இருப்பதாக சுட்டிக்காட்டி, “தெரியாமல் கைது செய்தோம்” என்ற விளக்கம் நம்பத்தகாதது என விமர்சித்தார்.

செய்யாத குற்றத்திற்காக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாகவும், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கைது செய்து அலைக்கழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். குற்றவாளிகளை விட்டுவிட்டு கல்வியாளர்களை அச்சுறுத்துவது தவறு என கூறிய அவர், கலையரசன் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

மேலும், ஊடகங்களில் நிர்வாகத் தோல்விகளைப் பற்றி உண்மையைப் பேசினால் மோசமான விளைவுகள் என மிரட்டும் “ரவுடி அரசு” போல் ஆட்சி நடக்கிறது என அவர் குற்றம்சாட்டினார். இப்படிப்பட்ட அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள் இந்த அநியாயத்தை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், போலீசாரும் முதல்வரும் கலையரசனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.