தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண அமைப்பு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் மாற்றப்பட்ட நிலையில், மாநிலம் முழுதும் ஆட்டோக்களில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருத்தி அமைக்க போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய கட்டணப்படி, முதல் 1.8 கி.மீ. தூரத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.25 வசூலிக்க வேண்டும்.
கட்டண உயர்வை ஆட்டோ தொழிற்சங்கங்கள் வரவேற்றுள்ளன; அதே நேரத்தில் சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன. அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், கட்டணம் அறிவிப்புக்கு முன் தொழிற்சங்கங்களுடன் ஆலோசிக்கலாம் என்றும், அரசு ஆட்டோ செயலி தொடங்குதல், முத்தரப்பு கமிட்டி அமைத்தல், பண்டிகை காலங்களில் நல வாரியத்தின் மூலம் ஓட்டுனர்களுக்கு ரூ.5,000 போனஸ் வழங்குதல் போன்றவற்றை வலியுறுத்தினார்.
உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க செயல் தலைவர் ஜாஹிர் ஹூசேன், கட்டண உயர்வுக்கு போக்குவரத்து துறைக்கு நன்றி தெரிவித்ததுடன், மீட்டர் திருத்தத்திற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள், புதிய கட்டணத்தை உடனடியாக பின்பற்ற வேண்டும் என்றும், மீட்டர்களை ஆறு மாதங்களுக்குள் திருத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதுவரை போக்குவரத்து துறை இணையதளத்தில் உள்ள கட்டண அட்டையை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பார்வைக்காக வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். அட்டையில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 5430 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.




