சென்னையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், கணக்கெடுப்புக்குப் பின் சமூக நீதிக் கணக்காய்வு நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 8 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பேசும்போது, குழந்தைகள் பாதுகாப்பு விதிமுறைகளில் சமரசம் செய்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மாவட்ட அளவில் ஆட்களை நியமித்து பள்ளிகளில் வசூல் செய்ததாகவும் கூறினார்.

மேலும், திமுகவினர் மிரட்டி பணம் பறித்ததாக பள்ளிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் புகாரின் அடிப்படையிலேயே ‘மகேஷ்’ கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். பேராசிரியர் கலையரசனை போலீசார் அலைக்கழித்தது தவறு என்றும், எதிர்பாராத விதமாக நடந்த தவறு என அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.