இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள கணக்கீட்டு நிலவரப்படி, 120 உறுப்பினர்கள் கொண்ட க்னெசெட்டில் ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை எந்தக் கூட்டணியும் எட்டவில்லை. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தோல்வியில் இருந்து தப்பினார் எனக் கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் சாதனை அளவாக 77% வாக்குப்பதிவு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் நடைபெறும் இத்தேர்தலில், கட்சிகள் பெறும் வாக்கு விகிதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. திங்கட்கிழமை இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் இதுவரை எண்ணப்பட்டுள்ளன.

தற்போதைய கணிப்புகளின்படி, நெதன்யாகுவின் லிகுட் தலைமையிலான ஆளும் கூட்டணி 53 இடங்களைப் பெறுகிறது. இதில் லிகுட் கட்சி 26 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. கூட்டணியில் உள்ள ஐக்கிய தோரா ஜூடாயிசம், ஷாஷ், ஓட்ஸ்மா யேகுடிட் ஆகியவை தலா ஏழு இடங்களும், ஜியோனிஸ்ட் கட்சி ஆறு இடங்களும் பெறுகிறது.

முன்னாள் ராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டின் யாஷார் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 48 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது; இதில் யாஷார் கட்சி மட்டும் 21 இடங்களைப் பிடிக்கிறது. மேலும், பாலஸ்தீனத்தை தனி நாடாகக் கோரும் அரேபியர்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 20% உள்ள நிலையில், இரண்டு அரபுக் கட்சிகள் இணைந்த கூட்டணி 19 இடங்களைப் பெறுகிறது.

எந்தக் கூட்டணிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாததும், மற்ற கூட்டணிகளுக்கு ஆதரவு அளிக்க கட்சிகள் தயங்குவதும் காரணமாக, இஸ்ரேலில் மீண்டும் தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகலாம் என கூறப்படுகிறது. 2019 முதல் 2022 வரை கூட்டணி அமைக்க முடியாததால் பலமுறை தேர்தல் நடந்த அனுபவமும் குறிப்பிடப்படுகிறது.