150 நாடுகளை கடல் வழியாகச் சுற்றிப் பார்க்கும் திட்டத்துடன் புறப்பட்ட குடியிருப்பு சொகுசுக் கப்பல் ‘வில்லா வி ஒடிசி’ பயணம், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

வார இறுதி சுற்றுலா கப்பல்களைப் போல அல்லாமல், கடலிலேயே நீண்டகாலம் வசிக்கக்கூடிய புதிய கருத்தில் இந்தக் கப்பலை அமெரிக்காவைச் சேர்ந்த ‘வில்லா வீ ரெசிடென்சஸ்’ நிறுவனம் உருவாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேளிக்கை மையங்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள், விளையாட்டு பகுதிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

அறைகளை ரூ.1.14 கோடி முதல் ரூ.4.18 கோடி வரை செலுத்தி வாங்கலாம்; வாடகைக்கும் எடுக்கலாம் என செய்தி கூறுகிறது.

இந்தக் கப்பல் வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் இருந்து 2024 அக்டோபரில் புறப்பட்டதாகவும், 15 நாடுகளைச் சேர்ந்த 200 பயணிகள் மற்றும் 156 பணியாளர்கள் பயணித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளில் 150 நாடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அமெரிக்கா–ஈரான் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு விலை உயர்ந்ததால் பயணம் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகள் கம்போடியாவில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்; கப்பல் தற்போது சிகானுக்வில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது பயணம் தொடங்கும் என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.