சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சமூகநலக் கூடங்கள் மற்றும் ‘சகி’ ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநகராட்சிக்கு சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும், வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ அமைக்கப்பட்ட ‘சகி’ மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

இந்த ஊழியர்கள் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்கு மாதக் கணக்கில் சம்பளம் வழங்காமல் துயரத்திற்கு உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்தார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், போனஸ் அல்லது முன்பணம் வழங்கப்படாது என்பதால், வழக்கமான ஊதியமே இவர்களின் ஒரே ஆதாரம் என அவர் குறிப்பிட்டார். அன்றாடச் செலவுகளையும் பண்டிகை செலவுகளையும் சமாளிக்க வசதியாக, தமிழக அரசு உடனடியாக ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.