வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்று, அதி தீவிர புயலாக மாறி ஆந்திரா அருகே கரையை கடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் புயல் வலுவிழந்து ஒடிஷா அருகே நிலைகொண்டதால், மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது. மொத்தம் 17 மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில், கஞ்சாம் மற்றும் கஜபதி மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்தன.
கஜபதி மாவட்டத்தின் மகேந்திரகிரியில் அதிகபட்சமாக 24 செ.மீ. மழையும், மோகனாவில் 18 செ.மீ. மழையும் பதிவானது. கஞ்சாம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்ததால், 2,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சனகேமுன்டி, அசிகா, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமைச் செயலர் அனு கார்க், கடலோர காவல்படையின் உதவியுடன் ஹெலிகாப்டர் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தொடரும் மழையால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். புயல் கரையை கடப்பதற்கு முன்பே தாழ்வான மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்த 48,000க்கும் மேற்பட்டோர் புயல் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்ததாக முதல்வர் மோகன் சரண் மஜி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.




