புதுடில்லி: தலைநகரில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனம், ராம்லீலா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இண்டி கூட்டணி பேரணியை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எதிராக, நவம்பர் 1-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என இண்டி கூட்டணி அறிவித்துள்ளது. கடிதத்தில், அந்த மைதானத்தைச் சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 20 முக்கிய மொத்த விற்பனை சந்தைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சந்தைகளிலிருந்து தினமும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுவதாகவும், போராட்டம் காரணமாக அக்.31 மற்றும் நவ.1 ஆகிய நாட்களில் வியாபாரம் முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாகவும் சம்மேளனம் எச்சரித்துள்ளது. இதனால் டில்லியில் உள்ள 20 லட்சம் வர்த்தகர்களிடையே பீதி நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 25 நாட்களில் நகரத்தின் வர்த்தகத் துறை ஏற்கனவே ரூ.3,000 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும், இந்தப் பேரணியால் மேலும் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50,000 பேர் மட்டுமே கூடும் திறன் கொண்ட மைதானத்தில் 10 லட்சம் பேர் திரள்வார்கள் என கூறப்படுவதால், போக்குவரத்து உள்ளிட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தீபாவளிக்குப் பிறகாவது பேரணியை ஒத்திவைக்குமாறு பிற வர்த்தக சங்கங்களும் இண்டி கூட்டணியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.