புதுடில்லி: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது நிதியின் ஒரு பகுதியை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் மாற்று முதலீட்டு நிதி (AIF) திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பரிசீலனையில் உள்ள முன்மொழிவின்படி, EPFO ஆண்டுதோறும் பெறும் நிதியில் 3% வரை மட்டுமே கேடகிரி 1 மற்றும் கேடகிரி 2 ஏஐஎப் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது.
கேடகிரி 1 ஏஐஎப் திட்டங்கள் பொதுவாக ஸ்டார்ட் அப், சிறு நிறுவனங்கள், உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வென்ச்சர் கேபிட்டல் முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றன. கேடகிரி 2 ஏஐஎப் திட்டங்கள் ரியல் எஸ்டேட், பட்டியலிடப்படாத பங்குகள், பிரைவேட் ஈக்விட்டி மற்றும் பிரைவேட் டெப்ட் பண்டுகள் போன்ற துறைகளில் முதலீடு செய்கின்றன.
இதற்கிடையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட “ஸ்டார்ட் அப் இந்தியா பண்டு ஆப் பண்ட்ஸ் 2.0” திட்டத்தில் EPFO நிதியை முதலீடு செய்ய வேண்டும் என மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக வளர்ச்சி துறை (DPIIT) கோரிக்கை வைத்துள்ளதாகவும், அதையும் EPFO ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஸ்டார்ட் அப் பண்டுகள் அல்லது ஏஐஎப் திட்டங்களில் EPFO நிதியை முதலீடு செய்வது குறித்து இன்னும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. நவம்பரில் நடைபெற உள்ள EPFO மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தகவல்கள் கூறுகின்றன.




