புதுடில்லி: அமெரிக்க மத்திய வங்கியான ‘பெடரல் ரிசர்வ்’ தனது வட்டி விகிதத்தை 3.75%–4% என்ற அளவிலேயே மாற்றமின்றி வைத்துள்ளது. இதனால், தீபாவளிக்கு முன் இந்தியாவில் தங்கம் வாங்குவோருக்கு சற்று நிம்மதி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை நிபுணர்கள் கூறுகையில், வரும் வாரங்களில் தங்கம் விலை குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதே நேரத்தில், இந்தியாவில் பண்டிகை கால தேவையும் அதிகரித்து வருகிறது.
ஆனால், டிசம்பரில் அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பை பொறுத்தே அடுத்தகட்ட விலை மாற்றம் அமையக்கூடும். மேலும், சர்வதேச அரசியல் பதற்றங்களும் தங்க விலையின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை ஏற்ற இறக்கங்கள் நிலவும் சூழலில், மொத்த தேவைக்கான தங்கத்தை ஒரே நேரத்தில் வாங்காமல், தேவைக்கேற்ப படிப்படியாக வாங்குவது விலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும் என நிபுணர்கள் அறிவுறுத்தினர்.




