உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 4 எண்ணெய் சரக்கு கப்பல்கள் கடந்த 24 மணிநேரத்தில் கடலில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3 கப்பல்கள் வெடித்து தீப்பற்றியதாகவும், மற்றொரு கப்பல் சேதமடைந்து நகர முடியாமல் நின்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்ட தகவலில், அனுமதிக்கப்படாத பாதை வழியாக செல்ல முயன்ற 3 கப்பல்கள் கண்ணிவெடிகளில் மோதி தீப்பிடித்ததாக தெரிவித்தது. மேலும், ரேடார் அமைப்புகளை அணைத்துவிட்டு எச்சரிக்கைகளையும் மீறிச் சென்றதால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
முக்கிய கடல்வழிப் பாதைகளில் இருந்த தடைகள் நீக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறிய மறுநாளே இந்தச் சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ரியாத் நோக்கி வீசிய 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி வான்வழி பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்ததாக சவுதி அறிவித்துள்ளது. ரியாத், கர்ஜ் மற்றும் நஜ்ரான் பகுதிகளில் விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டது.




