இந்தியாவின் வழிகாட்டுதல் மற்றும் இருப்பிடத் துல்லியத்தை வலுப்படுத்தும் நோக்கில், இஸ்ரோ இன்று (அக்டோபர் 30) இரவு 11:51 மணிக்கு என்விஎஸ்-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் இந்த ஏவுதல் நடைபெறுகிறது.
அமெரிக்க ஜிபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் ‘நேவிக்’ நெட்வொர்க்கில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து, துல்லியமான இருப்பிடச் சேவைகளை மீண்டும் முழுமையாக வழங்குவது என்விஎஸ்-03-ன் முக்கிய இலக்காக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2,232 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளில், அகமதாபாத் இஸ்ரோ மையம் உள்நாட்டிலேயே உருவாக்கிய அதிநவீன ரூபிடியம் அணுக் கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது. 12 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இது பொதுமக்களின் இருப்பிடச் சேவை, பேரிடர் மேலாண்மை, ரயில்வே போக்குவரத்து மற்றும் ராணுவம் சார்ந்த பாதுகாப்புத் தேவைகளுக்கு பயன்படும் என கூறப்படுகிறது.
ஏவுதலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.




