டிவி சேனல்களில் ஆபாசம் உள்ளதாக கூறப்படும் விளம்பரங்கள் மற்றும் பண்பற்ற நிகழ்ச்சிகளை முன்தணிக்கைக்கு உட்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த சகாதேவராஜா தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்கும் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. ஆணுறை, ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மருந்துகள், ஐஸ்கிரீம், வாசனை திரவியங்கள், உள்ளாடைகள் உள்ளிட்ட விளம்பரங்களில் தேவையற்ற அரைகுறை ஆபாச காட்சிகள் இடம்பெறுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்தணிக்கை இன்றி ஒளிபரப்புவது நாகரிக சமூகத்திற்கு ஏற்றதல்ல என்றும், குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கலாம் என்றும் மனுதாரர் வாதிட்டார்.
இதனால் பண்பற்ற நிகழ்ச்சிகள் மற்றும் ஆபாச விளம்பரங்களை ஒளிபரப்ப தடை விதிக்கவும், விளம்பரங்களை முன்தணிக்கைக்கு உட்படுத்தவும், விதிமீறும் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 2020-ல் இரு நீதிபதிகள் அமர்வு, பண்பற்ற நிகழ்ச்சிகள் மற்றும் ஆபாச உள்ளடக்கமுள்ள விளம்பரங்களை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்திருந்ததாக குறிப்பிடப்பட்டது. தற்போது நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலரிடம் விவரம் பெற்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நவம்பர் 19-ல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.




